நம் நண்பர்கள் நம்மை பற்றி உயர்வாக நினைக்கிறார்கள் என்று நாம் பெருமையாக கருதும் தருவாயில், அவர்கள் சடாரென்று ரூட் மாறி நம் எண்ணத்தில் மண்ணை அள்ளி போடுவதே மொக்கை வாங்குவது ஆகும். நாம் எல்லோரும் வாழ்க்கையில் ஒரு முறையேனும் மொக்கை வாங்கி இருப்போம் தானே ? வின்ஸ்டன் சர்ச்சில் யாரிடம் மொக்கை வாங்கினார் என்று பார்ப்போம் வாருங்கள்.
மறைந்த பிரித்தானிய பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு சிறந்த பேச்சாளர் ஆவார். இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் அது. பி.பி.சி. வானொலி, சர்ச்சில் உரையாற்றுவதற்கான ஏற்பாடு செய்திருந்தது. அன்றிரவு வானொலியில் பேச வேண்டியிருந்ததால், சர்ச்சில் தனது உதவியாளருடன் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தார். அப்போது, குண்டு வீச்சு தாக்குதலின் காரணமாகத் தெரு விளக்குகள் அனைத்தும் அணைந்து போக ஒரே இருட்டாக இருந்தது.
அந்த இருளில் ஒரு டாக்சி வருவதைக் கண்ட சர்ச்சில், உடனே அந்த டாக்சியை நிறுத்தி, "பி.பி.சி. வானொலி நிலையத்திற்குப் போக வேண்டும் " என்று கூறினார்.
டாக்சி டிரைவரோ," நான் அவசரமாக என்னுடைய வீட்டிற்குப் போக வேண்டும், ரேடியோவில் சர்ச்சில் பேசப் போகிறார். அதைக் கேட்க வேண்டும், ஆகையால் என்னால் வர இயலாது" என்றான்.
தன் மீதும் தன் பேச்சு மீதும், ஆர்வமும் மதிப்பும் வைத்துள்ள டாக்சி டிரைவரைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த சர்ச்சில் அவனுக்கு ஏதாவது அன்பளிப்புத் தர எண்ணியவராய் தன் கோட் பையிலிருந்து பத்துப் பவுண்டு நோட்டை எடுத்து நீட்டினார்.
பணத்தை பார்த்ததும் டிரைவர் அதை வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு " சார், ஏறி உட்காருங்கள், சர்ச்சில் எப்படியும் போகட்டும். நான் உங்களை பி பி சி யில் கொண்டு போய் விடுகிறேன் ! " என்றான். சர்ச்சிலின் மகிழ்ச்சி போன இடம் தெரியவில்லை. இங்கே வின்ஸ்டன் சர்ச்சிலை மொக்கைச்சாமி ஆக்கினார் அந்த டாக்சி ஓட்டுனர்.
Post a Comment