புது வரவு

பழமை

இளமை

இனிமை

புதுமை

அரிதும் அறிவோம்

Showing posts with label பழமை. Show all posts
Showing posts with label பழமை. Show all posts

Sunday, 25 May 2014

அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்


இன்று நாம் அறிந்து கொள்ளப் போகும் பழமொழியானது 

" அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார் "

நாம் அறிந்த விளக்கம் :
ஒரு மனிதன் அடித்தால் தான், அவன் உண்மையைச் சொல்லுவான் என்று நம்புகிறார்கள் பலர். பல சந்தர்ப்பங்களில் பெரியவர்கள், இப்பழமொழியை முன்னோடியாகக் கொண்டு குழந்தைகளை பின்னி எடுக்கின்றனர். வன்முறை மட்டுமே சில சமயங்களில் பயனளிக்கக் கூடும். அண்ணன் தம்பி கூட உதவாத பல தருணங்களில் வன்முறை நமக்கு நிச்சயமாக உதவும் என்று தவறாக அர்த்தம் புரிந்து கொண்டு, இன்றும் இப்பழமொழிக்கு அவ்வாறே விளக்கம் கொடுக்கின்றனர். 


நாம் அறியாத விளக்கம் :
உண்மை அதுவல்ல. அடி என்பது இறைவனின் திருவடி. துன்பம் ஏற்படும் போது இறைவனே கதி என்று அவன் திருவடியை பற்றினால், அண்ணன், தம்பி, உற்றார், உறவினர் எவர் உதவியையும் எதிர் நோக்கத் தேவை இருக்காது என்பதை உணர்த்தவே 'அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்' என்று கூறியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள். 


ஆகவே, இறைவனின் திருவடியை நம்பு, மற்றவரை நம்பாதே என்றும் பொருள் கொள்ளலாம். இதையே " பற்றுக பற்றற்றான் பாதந்தனை" என்றும் ஒரு ஞானி கூறியிருக்கிறார். ஆக இறைவன் அருள் உதவுவது போல யாரும் உதவ முடியாது என்பதை உணர்த்தும் மிக அருமையான பழமொழி இதுவாகும்.

Wednesday, 9 April 2014

யானைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கும் ஒரு காலம் வரும்

சென்ற வாரம், பழமொழி ஒன்று காலத்திற்கு ஏற்றார் போல எவ்வாறு மருவி விட்டது என்பதை படித்து ரசித்தோம். அதை போலவே இப்பொழுதும் ஒரு பழமொழியை அலசி ஆராயலாமா ?

“ யானைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கும் ஒரு காலம் வரும் “

இன்றைய பொருள் :
யானை போன்ற பலம் பொருந்தியவர்கள் ஒரு சில காலக் கட்டங்களில் வெற்றி பெற்றால்,   பூனையை போன்ற பலம் குறைந்தவர்களும் தகுந்த  நேரம் வரும் போது வெற்றி பெறுவார்கள். அதாவது, வலியோர்களுக்கு ஒரு காலம் வந்தால், எளியோர்களுக்கும் ஒரு காலம் வரும் என்பதே கருத்து. ஆனால், இது உண்மையான பொருள் இல்லை. இந்தப் பழமொழி உருமாறி இருக்கிறது


உண்மையான பொருள் :
‘ஆநெய்க்கு ஒரு காலம் வந்தால் பூநெய்க்கு ஒரு காலம் வரும்’ என்பதே உண்மையான பழமொழி.


‘ஆ’ என்றால் ஆவினம். ஆவினம் என்றால் பசுக்கூட்டம் என்று பொருள். பசுவின் பாலில் இருந்து கிடைக்கக்கூடிய நெய்யை இளமைக் காலத்தில் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பொலிவு ஏற்படும். 

‘பூ’ நெய் என்றால் பூவினால் கிடைக்கும் தேன். இந்தத் தேனை முதுமைக் காலத்தில் உட்கொண்டால் உடலுக்கு எந்தவிதமான தீங்குகளும் ஏற்படாது. இந்த கருத்தை உணர்த்தவே ' ஆநெய்க்கு ஒரு காலம் வந்தால் பூநெய்க்கு ஒரு காலம் வரும்'  என்று கூறியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள். ஆக,  இப்பழமொழியில் யானைக்கும், பூனைக்கும் சம்பந்தமில்லை என்பதையும் உணர்க.




Sunday, 30 March 2014

திருநீர் அணிவது எதற்காக என்பது தெரியுமா ?


குளியலைப் போலவே திருநீர் அணிவதும் அன்றாட வாழ்கையின் ஓர் முக்கிய பாகமாய் இருந்தது முற்காலத்தில்.


 தயாரிக்கும் முறை :
புல் மட்டும் அருந்தும் பசுவின் சுத்தமான எருவை, சிவராத்திரி அன்று உமியில் எரிப்பர். அதில் கிடைக்கும் சாம்பலை, தண்ணீரில் கலக்கி மறுபடியும் உலர வைத்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்த பின் நெற்றியில் இடுவதற்காக பாதுகாத்து வைக்கவேண்டும். இதுவே  சுத்தமான திருநீர் தயாரிக்கும் முறை.

அணியும் முறை :
திருநீரை நனைத்தும் நனைக்காமலும் அணிவதுண்டு. திருநீர் அணிந்தால் உடலின் துர் நீரை உறிஞ்சி எடுப்பதற்கும், உடல் வெப்பத்தைக் குறைப்பதற்கும், உடல்நிலையை மேன்மையடையச் செய்வதற்கும் வாய்ப்புண்டு என்பது நிருபிக்கப்பட்டுள்ளது.

திருநீரை நனைத்து அணிவதன் மூலம் உடல் வெப்பம் குறைவதனால் ஜுரம் பாதித்தவர்களின் நெற்றியில் நனைந்த திருநீர் பூசினால் ஜுரம் இறங்குவதை காணலாம்.

திரு விபூதி :
மூலிகைச் செடிகளை சுத்தமான நெய்யில் ஹோமகுண்டத்தில் வேக வைத்த பின் எஞ்சி இருப்பதை திருவிபூதி என அழைப்பதுண்டு.


உடல் முழுதும் திருநீர் பூச வேண்டுமா ?
திருநீர் பூசுவதையே மூட நம்பிக்கையாகக் கருதும் இக்காலத்தில், உடல் முழுதும் திருநீர் பூச வேண்டும் என்று சொன்னால், இறைவனருள் இதனால் கிடைக்கப் பெறும் என்ற நம்பிக்கை இருந்தாலும் உடலெங்கும் விபூதி அணிவதால் மற்றுமொரு நன்மை உண்டாகும்.

தலை உச்சியில் திருநீர் பூசினால் அங்குள்ள நீர்க்கெட்டை இழுத்தெடுக்கும் என்பது பலரும் கண்டறிந்துள்ளனர்.

பின் கழுத்தில் திருநீர் பூசுவது மிக  அவசியம் ஏனென்றால் நீரை உறிஞ்சி எடுக்கும் வாய்ப்பு மிக அதிகம் உள்ள இடம் அது.

காதுகளும் மிக முக்கியமான இடம். உடம்பின் 72,000 நரம்புகளும் ஒன்று சேரும் வர்மமாகும் காதுகள் ஒவ்வொரு நரம்புகளிலும் நீரும் கொழுப்பும் கட்டுவதற்கு வாய்ப்பு அதிகமுண்டு. இதனால் வாதம் பாதிப்புண்டாகலாம் என்று ஆயுர்வேதம் கூறுகின்றது.

உடலில் எந்த இடத்தில விபூதி அணிந்தாலும் அந்த இடத்தில் உள்ள ஈரத்தை உறிஞ்சி எடுக்கும். அவ்வாறு திருநீர் அணிந்தால் நவீன உலகமும் அங்கீகரித்த உடல் மருத்துவத்தை நாம் அடைகின்றோம் என்பதில் சந்தேகம் இல்லை.

Friday, 28 March 2014

பந்திக்கு முந்து, படைக்குப் பிந்து


கலைஞானி கமல்ஹாசன் அவர்கள், ஒரு திரைப்படத்தில் 'பழமொழி சொன்னா அனுபவிக்கணும், ஆராய கூடாது' என்று வசனம் பேசுவார். ஆனால் நாம், இந்த பகுதியில், சில பழமொழிகளை சொல்லிப் பார்த்து அனுபவிக்கவும் போகிறோம், ஆராயவும் போகிறோம்... ஆரம்பிக்கலாமா ?

பழமொழிகள் என்பவை பழைய தலைமுறையினர் நம் நல்வாழ்வுக்கு விட்டுச் சென்ற அனுபவக் கூற்றாகும். பழங்காலத்தில் மக்களுக்கு ஏற்பட்ட அனுபவ முதிர்ச்சியினால் தோன்றிய இந்த பழமொழிகள், ஒரு சமுதாயத்தில் நீண்ட காலமாக புழக்கத்தில் இருந்து, பிறகு காலம் மாற மாற, அதன் அர்த்தங்களும் திரிந்து மருவி, வேறு அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளப் படுகிறது. அவ்வாறு உருமாறி இருக்கும் ஒரு பழமொழியை இங்கே அலசலாம்.

" பந்திக்கு முந்து, படைக்குப் பிந்து"


இன்றையப் பொருள் :
"பந்திக்கு முந்து" என்றால் சாப்பாட்டிற்கு முந்திச் சென்று சாப்பிட்டுவிட வேண்டும். கடைசியில் சென்றால் சில வகைப் பதார்த்தங்கள் கிடைக்காது என்பதனால், பந்திக்கு முந்தவேண்டும் எனது கொள்கின்றனர். 

"படைக்குப் பிந்து" என்றால் சண்டை சச்சரவுகள் ஏற்படும் பொழுது மற்றவர்களை முன் நிறுத்திவிட்டு, நாம் பிந்திச் சென்று விடவேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா ? ஆனால் இதுவே உண்மையல்ல. 

உண்மைப் பொருள் :
உண்மையில் அக்காலத்தில் காலாட்படையின் ஒரு பிரிவுக்கு " பந்திப்படை " என்று பெயர். போர் நடக்கும் காலத்தில் பந்திப்படையை முன்னே செல்ல விட்டுவிட்டு, பயங்கர ஆயுதங்களைக் கொண்ட படைகளை பந்திப்படைக்கு பிந்தி செல்ல வைத்து போரை முறையாக நடத்த வேண்டும் என்பதைக் குறிக்கும் பழமொழி. 

ஆக நாம் எதிராளியிடம் சண்டையிடும்போதும்கூட அதில் ஒரு ஒழுங்கு முறை 
இருக்க வேண்டும் என்பதை விளக்கும் மிக அருமையான பழமொழி ஆகும். இப்பழமொழிக்கு வேறு ஒரு விளக்கமும் வழக்கத்தில் உள்ளது.


பந்தியில் சாப்பிடுவதற்கு நம் வலது கை முந்தும். படைக்கு செல்லும் சமயத்தில் நம் வலது கை நாணைப் பின்னோக்கி இழுத்து அம்பை எய்யும். எவ்வளவு தூரம் பின்னோக்கி வலக்கை செல்கிறதோ அந்த அளவிற்கு அம்பு வேகமாகச் சென்று எதிரியை தாக்கும் என்பதால் , வலது கை  பந்திக்கு முந்தும். படைக்குப் பிந்தும் என்று சொல்கின்றார்கள். இதுவே நாளடைவில் உருமாறி "பந்திக்கு முந்து, படைக்கு பிந்து" என்று உருவாகிவிட்டது என்றும் சிலர் கூறுகின்றனர்.

Wednesday, 26 March 2014

பிலிப்பைன்ஸ் என்ற பெயர் எதனால் வந்தது என்று தெரியுமா ?


போர்சுகீசியரான பெர்டினன்ட் மெகல்லன் ( Ferdinand Magellan ) என்பவர், போர்சிகீசிய கடற்படையில் சேர ஆசைப்பட்டு விண்ணப்பித்தார். ஆனால், அரசர் இமானுவேல் ( Immanuel ) அதை நிராகரித்து விட்டார். 


அந்தக் கோபத்தில் நாட்டை விட்டு வெளியேறி, ஸ்பெயினில் குடியேறினார் பெர்டினன்ட் மெகல்லன். ஸ்பெயின் அரசனின் உதவியோடு 1519 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் நாள், மெகல்லனும் அவனுடைய 270 சகாக்களும் ஸ்பெயினிலிருந்து ட்ரிடினினாட், கொன்செப்சியன், சான் அன்டோனியோ, விக்டோரியா, சன்டியாகோ ஆகிய 5 சிறிய படகுகளில் உலகினைச் சுற்றப் புறப்பட்டனர். கொலம்பஸ்ஸைப் போல புதிய நாடுகளை கண்டறிவதே இந்த கடற் பயணத்தின் நோக்கமாக இருந்தது. 

1521 ஆம் ஆண்டு மார்ச் மாதம்.  தற்போது பிலிப்பைன்ஸ் என்ற அழைக்கப்படும் தீவின் ஒரு பகுதியான 'மெகல்லன் ஜலசந்தி'யை ( Strait Of Magellan ) அடைந்தனர். பிலிப்பைன்ஸ் தீவில் காலடி வைத்த முதல் ஐரோப்பியன் மெகல்லன் தான். அந்த நாட்டை தனக்கு உதவிய ஸ்பெயின் நாட்டு மன்னரின் ஆளுகைக்கு கீழ் கொண்டு வர முற்பட்டான். அப்போது, அந்த தீவில் வசித்த மக்களுடன் ஏற்பட்ட கைகலப்பில், ஒரு மூங்கில் ஈட்டி குத்தியதால் தன் நாற்பத்தி ஓராவது அகவையில் மரணத்தைத் தழுவினான்.  பசிபிக் பெருங்கடலில் பிரயாணம் செய்த முதல் ஐரோப்பியர் என்ற பெருமையும் மெகல்லனைச் சேரும். 




அதற்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு, 1542 ஆம் ஆண்டு ஸ்பெயினில் இருந்து வந்த  ருய் லோபெஸ் டி வில்லலோபோஸ் ( Ruy López de Villalobos )  என்பவர், பலத் தீவுகளைக் கொண்டு ஒரு பெரிய தீவுக்கூட்டமாக விளங்கும் அந்தப் பகுதிக்கு,  தனது மன்னன் பில்லிப் II (King Philip II)வை கௌரவபடுத்தும் விதமாக,  பிலிப்பைன்ஸ் தீவுகள் என்றுப் பெயரிட்டார்.

Sunday, 23 March 2014

சிவனின் வாகனம் நந்தியின் பெயர் காரணம் என்ன ?

சிவ பெருமானிடம் ஏதேனும் வேண்டுதல் இருந்தால் , அதை அவர் வாயிற் காப்போன் நந்தியின் காதில் ஓதி விட்டால், சிவன் காதிலேயே ஓதியது போல ஈடேறி விடும் என்ற ஐதீகம் உண்டு. இதை நாமும் காலம் காலமாக பின் பற்றி வருகிறோம். இந்த நந்தி பகவானுக்கு நந்தி என்ற பெயர் எவ்வாறு வந்தது ? இந்த பெயருக்கு பல காரணங்கள் இருப்பதாக சான்றோர்கள் கூறுகின்றனர். சிலவற்றை இங்கே காண்போமா ?

காரணம் 1 :
சிவ வணக்கம் தோன்றிய நாளிலிருந்தே, நந்தி என்பது சிவனது பெயராக இருந்து வருகிறது. அது 'ஆனந்தி' என்ற சொல்லின் சிதைவு ஆகும். 'ஆனந்தி' என்ற சொல் ஆனந்தத்தைச் செய்பவனாகிய சிவபெருமானைக் குறிக்கும். 'நந்தினி' என்ற சொல் அம்மையைக் குறிக்கும்.

காரணம் 2 :
'காளைமாடு' என்ற பொருளில் நந்தி என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். அக்கால மக்களின் வாணிபத்தில் பேருதவி புரிந்து வந்தது எருது ஆகும். எனவே அது வணக்கத்திற்குரிய விலங்காக மாறிவிட்டது.


தஞ்சை பெரிய கோவில் நந்தி
15 ஆம் நூற்றாண்டு 
காரணம் 3 :
நந்தி என்றால் நாகம் என்ற பொருளும் உண்டு. பாம்பை அணிந்தவன் சிவபெருமான் என்ற பொருளிலும் நந்தி என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

காரணம் 4 :
தமிழில் நந்தி என்ற சொல் 'நந்துதல்' என்ற வினைச் சொல்லில் இருந்து வருகிறது. இதில் விசித்திரம் என்னவென்றால் நந்துதல் என்ற சொல்லிற்கு மூன்று பொருள்கள் உள்ளன 

1. ஆக்கம் 
2. வளர்தல்,தழைத்தல்,விளங்குதல் என்ற பொருளும் உண்டு
3. அவிதல்,மறைதல், கெடுதல் என்றும் பொருள் உண்டு.

இவ்வாறு இறைவனாகிய சிவபெருமான் ஆக்கவும், காக்கவும், அழிக்கவும் செய்கிறான். சிவபெருமானின் மூன்று அடிப்படையான செயல்களையும் உள்ளடக்கிய சொல் நந்துதல் என்பது. ஆகவே நந்துதலைச் செய்பவன் நந்தி என்று காரணப் பெயராகவும் அது உருவாகிவிட்டது.

ஹளேபிடு கோவில் நந்தி, கர்நாடகா
12 ஆம் நூற்றாண்டு


இந்தப் பதிவின் காணொளியைக் காண : 


Saturday, 22 March 2014

கிளிமஞ்சாரோ என்றால் என்ன ?


‘கிளிமஞ்சாரோ மலைக் கனிமஞ்சாரோ யாரோ யாரோ ?’

யாருங்க இந்த கிளிமஞ்சாரோ ? கிளிமஞ்சாரோ என்பது, ஆப்ரிக்க நாட்டில் உள்ள தன்சானியாவில் அமைந்துள்ள பனி பொதிந்த ஒரு உயரமான மலைத் தொடர் ஆகும்.


இருபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வெடித்த கீபோ, மாவென்ஸி, மற்றும் ஷிரா என்ற மூன்று ஆக்ரோஷமான எரிமலைகளின் எச்சங்கள் தான், கிளிமஞ்சாரோ மலைத்தொடர். ஷிரா மற்றும் மாவென்ஸி மலைகள் இறந்த எரிமலைகளாக கருதப்படுகின்றன. ஆனால், கீபோ மலையோ உறங்கிக் கொண்டிருக்கும் எரிமலை ஆகும். எப்பொழுது வேண்டுமானாலும் வெடிக்கும் அபாயம் உள்ளது.


இந்த கீபோ மலைத்தொடரில் தான், ஆப்ரிக்காவின் உயரமான சிகரமான உஹுரு உள்ளது. பளபளக்கும் மலை என்று செல்லமாக அழைக்கப் படும் கிளிமஞ்சாரோ மலை, பல்லாயிரக்கணக்கான வனவிலங்குகளின் உறைவிடம் ஆகும். ஒரு எல்லைக்கு அப்பால், மலை ஏறுபவர்களை பேய் பிசாசுகள் கொன்று விடும் என்ற மூட நம்பிக்கை இன்றும் நிலவுவதால், காட்டு வாசிகளும் இந்த மலை ஏற தயங்குகின்றனர், என்பதே மிகவும் ஆச்சர்யமான விஷயம் ! 

ஆனாலும், மனிதர்களின் விடாமுயற்சியும், கடின உழைப்பும் கண்டிப்பாக பலன் தரும் அல்லவா ? ஹான்ஸ் மேயர் என்ற ஜெர்மானியரும், ப்ருஷ்ஷேல்லர் என்ற ஆஸ்திரியரும், பல தடைகளைத் தாண்டி, 1889 ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி கீபோ மலை உச்சியை அடைந்து சாதனை புரிந்தனர்.  தற்போது இங்கு மலை ஏறும் துணிகரமான பயிற்சி அளிக்கப் பட்டாலும், மலை ஏறும் போது நேரும் விபத்துகளும், உயிர் பலிகளும் அதிகம் ஆகும். இதற்கு காரணம், கிளிமஞ்சாரோவின் செங்குத்தான மலைப்பாங்கும், வழுக்கும் ஐஸ் பாறைகளும் ஆகும்.  



அதெல்லாம் இருக்கட்டும். கிளிமஞ்சாரோ என்ற பெயரின் காரணம் என்னவென்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆப்ரிக்காவில் வாழும் 'பண்ட்டு' இனத்தவரின் மொழி 'ஸ்வாஹிலி' ஆகும். இந்த மொழியில் ‘கிளிம’ என்றால் மலை என்றும் ‘ஞ்சரோ’ என்றால் உயர்ந்த என்றும் பொருள் படும். அதாவது, கிளிமஞ்சாரோ என்றால், உயர்ந்த மலை என்று பெயர் சூட்டியுள்ளனர். சரிதானே ??  


இந்தப் பதிவின் காணொளியைக் காண : 



தாய் தந்தை என்ற சொற்களுக்கு விளக்கம் தரும் ஒரே மொழி எது ?


உலகில் பத்தாயிரத்திற்கும் மேலான எண்ணிக்கையில் மொழிகள் இருக்கிறது என்று மேதைகள் கணித்து இருக்கிறார்கள். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் மட்டுமே, எழுத்துருவுடன் கணிசமாக புழங்கப்பட்டு வருகிறது. பல மொழிகள் வெறும் பேச்சு வழக்கிலும், மேலும் சில மொழிகள், இறந்து போன மொழிகள் ( Extinct Languages ) என்று குறிப்பிடப்படுகின்றது.

இன்றளவும் உயிரோட்டமுள்ள மொழியாக கருதப்படும் நம் தமிழ் மொழியில் தான், கி.மு. முதலாம் நூற்றாண்டில் உலகின் முதல் இலக்கண நூலான ‘தொல்காப்பியம்’ இயற்றப்பெற்றது. திராவிட மொழியான தமிழ்மொழி, இந்திய மொழிகளிலேயே மிக தொன்மையானது என்று 2004 ஆம் ஆண்டில் இந்திய அரசால் கௌரவிக்கப் பட்டது.



இதெல்லாம் நமக்கு தெரிந்த விஷயம் தான் என்றாலும், தமிழ் மொழியின் தனித் தன்மைக்குச் சான்றாக விளங்குவது, அதன் பல்வேறு வட்டார மொழிகளும் அவை வழங்கும் அழகியலும் ஆகும்.

தமிழ் மொழி என்பது பொதுவாக இருந்தாலும், நம் தமிழ் நாட்டிலேயே வேறு வேறு பகுதிகளில் உச்சரிக்கப்படும் தமிழை தனித்தனியாக பாகுபடுத்தி இருக்கிறார்கள். சென்னைத தமிழ் அல்லது மதராஸ் பாஷை, கொங்கு தமிழ், தஞ்சைத் தமிழ், நெல்லைத் தமிழ்,  குமரித் தமிழ், திருச்சித் தமிழ், யாழ்ப்பாணத் தமிழ், திருகோணமலைத் தமிழ், மட்டகளப்புத் தமிழ், மலேசிய தமிழ் , ஐயர் தமிழ், ஐயங்கார் தமிழ், பெங்களூரு தமிழ் என்ற பலவிதமான தமிழ் இருக்கிறது.

எடுத்துக்காட்டாக :
இங்கண் – இ + கண் = இவ்விடம் ( இது சங்கத் தமிழ் )

இது எவ்வாறு மருவி விட்டது என்பதை பட்டியல் இட்டுள்ளோம் :
இங்கு – கொங்கு தமிழ்
இங்க – தஞ்சை தமிழ்
இங்கை – இலங்கைத் தமிழ்
இங்கன – நெல்லைத் தமிழ்
இங்குட்டு – மதுரைத் தமிழ்

சரி, அதெல்லாம் இருக்கட்டும். தாய் தந்தை - இவற்றின் பெயர் காரணம் என்ன ? தாய் தந்தை என்ற சொற்களுக்கு, ஒரு அற்புதமான பெருந்தன்மையான விளக்கம் கொடுப்பது, உலகிலேயே நம் தமிழ் மொழி மட்டும் தான்.

தாய் = குழந்தையை தாவி எடுத்து தழுவுபவள்
தந்தை = குழந்தையை தந்தவன் = தந்த + தலைவன் (ஐயன்) = தந்த + ஐ

என்னே நம் தமிழ் மொழியின் வளமை! செழுமை!! தொன்மை!!! பெருமை!!!!


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மைய நோக்கப் பாடல் 




இந்தப் பதிவின் காணொளியைக் காண :



Thursday, 20 March 2014

அமெரிக்காவை கொலம்பஸ் தான் கண்டு பிடித்தாரா ?

அமெரிக்காவை கண்டுபிடித்த பெருமை கொலம்பஸை சார்ந்தாலும், பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஆராய்ச்சி மேதைகள் அந்த கருத்தை, ‘இது பொய்யானது’ என்று மறுத்தார்கள். ஏன் இந்த கருத்து வேறுபாடு ? அமெரிக்காவிற்கும் கொலம்பசிற்கும் என்ன சம்பந்தம் ? வாருங்கள் பார்க்கலாம்.

கொலம்பஸ் ஐரோப்பாவில் பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மாலுமி ஆவார். இத்தாலி நாட்டில் உள்ள ஜெனோவா என்ற பகுதியில் பிறந்த இவர், சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஒரு மேதை இல்லை. மூட நம்பிக்கைக்கைகளில் ஊறி திளைத்த இவர், உலகம் வெகு சீக்கிரம் அழியும் என்பதை நம்பினார்.


அக்காலத்தில் ஐரோப்பர்கள் ஆசியாவை அடைய வேண்டும் என்றால், மிக பெரிய கண்டமான ஆப்பிரிக்காவை சுற்றி தான் போக வேண்டும். ஆனால் ஐரோப்பாவில் இருந்து வடக்கு நோக்கி பயணம் செய்து ஆசியாவையும் இந்தியாவையும் அடையலாம் என்று கணக்கு போட்ட கொலம்பஸ், போர்ச்சுகல் அரசரிடம் கப்பல் மற்றும் வழி செலவுக்கு வேண்டினார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அங்கே நிராகரிக்கப்பட்டு ஸ்பெயின் அரசரிடம் சென்று உதவி கேட்டார். ஆறு ஆண்டுகள் காத்திருந்து பார்த்து விட்டு பிரெஞ்சு அரசரிடம் செல்லும் தருவாயில், ஸ்பெயின் அரசு அவருக்கு உதவி அளித்தது. 

அரசு கொடுத்த நினா, பிண்டோ, சாண்டா மரியா என்ற மூன்று கப்பல்களில், 1492 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் நாள், வடக்கு நோக்கி பயணத்தை தொடங்கிய கொலம்பஸ், அக்டோபர் இரண்டாம் நாள், முதல் கரையைக் கண்டு ‘சண் சால்வடோர்’ என்ற கரீபிய தீவை அடைந்தார். கியுபா, ஹிஸ்பானியோலா,இலா நவிடாத் ஆகிய தீவுகளை கண்டு பிடித்தாலும் , ஆசியாவில் உள்ள இந்தியாவை அடையும் அவர் நோக்கம் ஈடேறவில்லை என்பதே உண்மை.

அவருடைய இரண்டு கப்பல்கள் தரை தட்டியதால் ஸ்பெயினுக்கு திரும்பி சென்ற இவர், புது கப்பல்களில் வந்து அந்த தீவுகளை கைப்பற்றி ஸ்பெயின் ஆட்சியை அங்கு நிலைநாட்டினார். இவர் ஒரு சிறந்த மாலுமி ஆனாலும் மிக மோசமான ஆட்சியாளர் ஆவார். ஸ்பெயின் இவருக்கு கொடுத்த ஆட்சி பொறுப்பை சரியாக நிர்வாகம் செய்யாமல், ஊழல் கேளிக்கைகளில் கழித்ததால், பிற்காலத்தில் அந்த தீவு மக்களாலேயே கைது செய்யபட்டார்.


உண்மை என்னவென்றால், கொலம்பஸ் அமெரிக்காவை அடையவே இல்லை. அவர் பஹாமாஸ் தீவுக்கூட்டத்தை ஆசியா என்று நினைத்து அந்த தீவு மக்களை இந்தியர்கள் எனத் தன் பயணக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அவர் அடுத்து மேற்கொண்ட பிரயாணத்தில் மேலும் தெற்கே சென்று, தென் அமெரிக்காவில் கால் பதித்தார். பிற்காலத்தில் ஆராய்ச்சி மேதைகள் பலர், ‘கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடித்தார் என்ற கருத்து தவறானது. ஏனென்றால், அந்த நாட்டில் ஏற்கனவே ஆயிரக்கணக்கானோர் வாழ்ந்து நாகரிகங்களை உருவாக்கி உள்ளனர். இவர் கண்டு பிடிப்பதற்கு முன்னரே, பல ஐரோப்பர்கள் அந்த நாட்டை அடைந்து வணிகம் மேற்கொண்டு உள்ளனர்’ என்று வாதிடுகின்றனர்.

கொலம்பஸ் ஒரு வரலாற்று வீரன் இல்லாவிட்டாலும் , இன்றளவும் அமெரிக்காவில் கொலம்பஸ் டே கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது !




இப்பதிவின் காணொளியைக் காண :


 
Copyright © 2014 அரிதும் அறிவோம்
Powered byBlogger