வணக்கம் நண்பர்களே ! சில சமயம் நம் நண்பர்களோ உறவினர்களோ, 'ஜோக் அடிக்கிறேன் பேர்வழி' என்று இங்கிதம் தெரியாமல் கேள்வி கேட்டு நம்மை புண்படுத்துவர். இப்படி செய்யும் போது, நம்மில் சிலர் அதை வாங்கி கட்டிக்கொண்டு நண்பராயிற்றே என்று பொறுமையாக சிரித்து மழுப்புவோம். இது போன்ற மனிதர்கள் ஒரு ரகம் என்றால், மற்றொரு ரக மனிதர்கள் என்ன செய்வர் தெரியுமா ? சமயோசிதமாக யோசித்து அதற்க்கு தகுந்த பதிலடி கொடுத்து எதிராளி முகத்தில் கரியைப் பூசுவர்.
மறைந்த திரைப்பட பாடலாசிரியர் வாலி அவர்கள், இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அவர் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை காண்போமா ?
திரைப்பட பாடலாசிரியர் 'வாலி'யை, ஒரு சமயம் அவருடைய நண்பர் ஒருவர் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது நண்பர் "டி.எஸ். ரங்கராஜன் என்ற அம்சமான உங்கள் இயற்பெயரை விடுத்து, வாலி என்று தாங்கள் பெயர் வைத்துக்கொள்ள என்ன காரணம்?" என்று கேட்டார்.
அதற்கு வாலி அவர்கள், "இராமாயணத்தில் வரும் வாலி எதிராளியின் பலத்தில் பாதியைப் பெற்று விடுபவன். அதேபோல நான் பார்ப்பவர்களின் அறிவில் பாதியைப் பெறவே இந்தப் பெயரை வைத்துக்கொண்டேன் " என்று கூறினார்.
உடனே அந்த அதிக பிரசங்கித்தனமான நண்பர் வாலியை மட்டம் தட்டுவதாக எண்ணி "உங்களைப் பார்த்தால் அப்படி அறிவைப் பெற்றவர் போல் தெரியவில்லையே? என்று கிண்டலாகச் சொன்னார்.
அதற்கு வாலி சிரித்துக் கொண்டே, "நான் இன்னும் எந்த அறிவாளியையும் சந்திக்கவே இல்லையே!" என்று மடக்கி நண்பரை திக்கு முக்காட வைத்தாரே பார்க்கலாம் !
Post a Comment