புது வரவு

பழமை

இளமை

இனிமை

புதுமை

Saturday 29 March 2014

சரும பலவிருத்தி என்பது யாது ?


பட்டு போன்ற நம் சருமம் வெயில், தூசி, மழை போன்ற பல காரணிகளால் பாழாகிறது. குறிப்பாக நம் முகத்தை பேணி பாதுகாப்பது மிகவும் கடினமான செயல் ஆகும். நம் முகம் எப்போதும் பொலிவுடன் விளங்க ஒரு சரும பலவிருத்தி அல்லது ஸ்கின் டானிக் (Skin Tonic) இருப்பது தெரியுமா ?? ஸ்கின் டானிக்கா ?? இதன் மூலப்பொருள் என்ன ? இது எங்கே கிடைக்கும் ? எப்படி பாவிப்பது ? நம் வீட்டிலேயே தயாரிக்கலாமா ? இந்த கேள்விகளுக்கு விடை இதோ!

ரோஜா இதழ்களைக் கொண்டு தயாரித்த சாறு தான் நாம் குறிப்பிடும் 'சரும பலவிருத்தி' ஆகும். ரோஸ் வாட்டர் அல்லது பன்னீர் என்று கேட்டால் எல்லாக் கடைகளிலும் கிடைக்கும். நறுமணம் வீசும் இந்த பன்னீர், நம் நாட்டு சமையலில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. பண்டைய ரோமர்கள் இதை ஒரு கிருமி நாசினியாக பயன்படுத்தினர். பாபிலோனியர்களும் தங்கள் மத வழிப்பாட்டு நெறிகளில் பன்னீரை உபயோகித்தனர். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, உலக அழகி க்ளியோபாட்ரா ரோஜா எண்ணையை உடல் முழுக்க தேய்த்து, ரோஜா இதழ்களும் பாலும் கலந்த தொட்டியில் குளித்து தன் அழகை பராமரித்தாள் என்பது உலகறிந்த விஷயம் தானே !


பன்னீர் எல்லா கடைகளிலும் கிடைத்தாலும், இதை நம் வீட்டிலேயே தயாரிப்பதும் சுலபம். வீட்டில் ரோஜா செடிகளை வளர்ப்போர் இதை செய்யலாமே! அதிகாலையில் ரோஜா இதழ்களை பறித்து, குளிர்ந்த நீரில் நன்கு அலசி, ஒரு பெரிய பாத்திரத்தில் வடி கட்டிய நீரில் இட்டு கொதிக்க விட வேண்டும். நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், மூடி போட்டு தீயை நிறுத்தவும். நீரில் ரோஜா இதழ்களின் சாறு இறங்கும் வரை மூடியே வைத்திருந்து விட்டு, சில மணி நேரம் கழித்து அதை வடிகட்டி பயன்படுத்த வேண்டும்.


சரும பாதுகாப்பு :
பன்னீர் கலந்த நீரால் முகத்தை அடிக்கடி கழுவினால், முகம் பளப்பளப்பாக மாறும். அது மட்டும் அல்லாமல், எண்ணெய் பிசுக்கை போக்கும். வேனிர் கட்டிகள், சிறு புண்களை ஆற வைக்கும். சிரங்குகள், முகப்பருக்கள் வராமல் தடுக்கும்.

கூந்தல் பராமரிப்பு :
நீரில் பன்னீரை சேர்த்து கூந்தலை அலசுவதால், பொடுகு வராமல் தடுக்கிறது. ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் கூந்தல் வேர்களை பலமாக்கி, முடி வளர்வதை ஊக்குவிக்கிறது.

கண்களுக்கு உதவி :
தூக்கமின்மை, வெகு நேரம் கண் முழித்து வேலை பார்ப்பது, மணிக்கணக்காக கணிப்பொறியில் வேலை செய்வது ஆகியவற்றால் கண்ணுக்கு கீழே கரு வளையம் தோன்றும்.  இரவில் படுக்கும் முன் கண்களைச் சுற்றி பன்னீரை தடவிக் கொண்டு படுத்தால் நாளடைவில் கரு வளையம் நீங்கி கண்கள் பிரகாசிக்கும்.


பற்களை சுத்தப்படுத்த :
பன்னீர் ஒரு சிறந்த கிருமி நாசினி என்பதால், பற்கள் சம்பந்தப் பட்ட அனைத்து குறைகளையும் தீர்க்கிறது. பன்னீரை கொண்டு தினமும் இரண்டு வேலை வாயை கொப்பளித்து ( Mouth Wash ) வருவதால், வாய் துர்நாற்றம், ஈறு வலி, ரத்தக் கசிவு, பற்காரை இவற்றை நீக்குகிறது.

மன அழுத்தம் போக்க :
ரோஜா பூவின் நறுமணம் மன அழுத்தத்தை போக்கும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். இதனாலேயே, ரோஜா எண்ணையை பல அழகு நிலையங்களில் மசாஜ் செய்யப் பயன்படுத்துகிறார்கள். ரோஜா பூ நறுமணம் மிக்க ஊதுபத்திகளை தியான அறைகளில் உபயோகிப்பதால், ரத்த அழுத்தமும், மன அழுத்தமும் குறைகிறது.


 எங்கே புறப்பட்டு போறீங்க ? பன்னீர் வாங்கத் தானே ?
  

Post a Comment

 
Copyright © 2014 அரிதும் அறிவோம்
Powered byBlogger