புது வரவு

பழமை

இளமை

இனிமை

புதுமை

Monday 28 April 2014

ஊறும் எறும்புகள், கூறும் கருத்துக்கள் !


வணக்கம் நண்பர்களே ! நம் பூமியில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக, அதாவது மனிதன் பிறந்த காலத்துக்கு முந்தைய காலத்தில் இருந்தே வாழும் ஒரு உயிரினத்தைப் பற்றி உங்களுக்கு தெரியுமா ?  இந்தச் சிறிய உயிரனங்கள், டினோசர்களுடன் வாழ்ந்தவை. மனிதன் போலவே எல்லாக் கண்டங்களிலும் தன் குடியிருப்பை நிறுவி வாழ்ந்து வருபவை. ஆம்,  நீங்கள் யூகித்தது சரி தான். எறும்புகளைப் பற்றிய அரிய தகவல்களை தான் இன்று நாம் அறிந்துக் கொள்ளப் போகிறோம். வாருங்கள் !


உலகில் மிக மேன்மையான பிறப்பு எதுவென்றால் மனித இனம் என்று தானே சொல்லுவோம் ? ஆனால், மனிதர்களை விட உன்னதமான பிறப்பு எறும்புகள் தான் என்று ஆராய்ச்சியாளர்கள் குண்டை தூக்கிப் போட்டு இருக்கிறார்கள். அதாவது, எறும்புகள் மனிதர்களைக் கூட தந்திரமாக வென்று விடும் அளவுக்கு கூரிய அறிவு படைத்ததாம். புத்திசாலி எறும்புகளான ஃபார்மிக்கா எறும்புகளால் 1 முதல் 60 வரையிலான எண்ணிக்கையை சுலபமாக எண்ண முடியுமாம். எறும்புகளின் வாழ்கை,  நடை, பாவனைகள் எல்லாம் மனிதர்களை ஒத்து இருப்பதாக கண்டுப்பிடித்து இருக்கிறார்கள். மனிதன் ஒரு சமூக விலங்கு. அதை போலவே எறும்புகளும், கூட்டம் கூட்டமாக குடியிருப்புகள் அமைத்து வாழும் தன்மை உடையவை என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

Types of Ants
எறும்புகள் தங்கள் எடையை விட 50 மடங்கு எடையை சுமந்து செல்லும் ஆற்றல் உடையவை.  இது எவ்வாறு சாத்தியம் ஆகிறது என்றால், இவைகளின் தசைகள் மனிதர்களின் தசைகளை விட இறுக்கமானவை ஆகும். சில எறும்பு வகைகளில் போர் செய்யும் எறும்புகள், தங்கள் தலைகளை புற்றின் வாயிலில் அடைத்து வைத்து எதிரிகள் வராமல் கடமை ஆற்றும். 

சில வகை செடி தண்டுகளில் வெற்றிடம் இருக்கும். அங்கே குடி இருக்கும் எறும்புகள் செடிகளின் சாற்றை உண்டு வாழ்வதோடு மட்டுமல்லாமல், அதற்கு நன்றி கடனாக அந்தச் செடிகளை புழு, பூச்சிகள் அண்டாமல் காக்கவும் செய்கிறது.

இந்த பூமியில் உள்ள எறும்புகளின் மொத்த எடை எவ்வளவு தெரியுமா ?  இதில் வாழும் அனைத்து மனிதர்களின் எடைக்குச் சமமாகும். அதாவது, இந்த புவியில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் நிகராக, பதினைந்து லட்சம் எறும்புகள் வாழ்கிறதாம். வியப்பாக இருக்கிறது அல்லவா  

மனிதர்களை போலவே உயர் நிலையில் உள்ள சில எறும்புகள் தங்களை விட பலம் குறைந்த எறும்புகளை அடிமையாக்கி வேலை வாங்குமாம்.

Soldier Ants Vs Worker Ants

அதெல்லாம் இருக்கட்டும், எறும்புகள் எப்படி ஒரே நேர்கோட்டில் போகிறது  என்று பல முறை ஆச்சரியப்பட்டு இருக்கிறோம் அல்லவா ? முதலில் Scout Ant  எனப்படும் ‘சாரணர் எறும்பு’ உணவை தேடி அங்கும்,  இங்கும் அலையுமாம். அது உணவை கண்ட பின் பாதி உண்டு, ஒரு நேர்கோட்டில் தன் குடியிருப்பை நோக்கி திரும்பும். அப்படித் திரும்பும்போது ஃபெரோமோன் ( Pheromone ) என்ற ஒரு நறுமணத்தை பீச்சி கொண்டே செல்லுமாம். இதை மோப்பம் பிடித்து தான் மற்ற எறும்புகள் உணவு சேகரிக்கின்றன. 

அந்த நறுமணத்தை நீர் அல்லது வேறு ஏதேனும் தடை செய்யுமாயின், எறும்புகள் எல்லாம் திருவிழாவில் காணமல் போன குழந்தைகளைப் போல் அங்கும் இங்கும் ஓடுகின்றன. 

Scout Ant's Trail 

எறும்புகளிடம் இருந்து மனிதர்களாகிய நாம் கற்றுக் கொள்ள வேண்டியது,  போட்டிப் பொறாமை இல்லாமல் கூட்டு முயற்சியுடன் செயலாற்றும் உயரிய பண்பு என்று சொன்னால் மிகையாகாது.

Team Work !


2 comments :

  1. நீயெல்லாம் எனக்கு சும்மா எறும்புடா அப்பிடின்னு யாரையும் சாதரணமா பேசிட கூடாதுன்னு தெரிஞ்சுகிட்டேன்...படங்களும்...அதை சொன்ன பாங்கும் அருமை..வாழ்த்துக்கள் நன்றி

    ReplyDelete
  2. அருமையான பதிவு இந்த சாரணர் எறும்பை பார்த்துதான் சாரணர் இயக்கம் தோன்றியதா?.அருமையான தகவல்கள் கண்டிப்பாக நாம் கற்றுக்கொள்ள வேண்டியது பொறாமை இல்லாத ஒற்றுமை, உள் அரசியல் செய்யாத உண்மையான அன்பு தொடரட்டும் எழுத்துப்பணி

    ReplyDelete

 
Copyright © 2014 அரிதும் அறிவோம்
Powered byBlogger