புது வரவு

பழமை

இளமை

இனிமை

புதுமை

அரிதும் அறிவோம்

Sunday, 30 March 2014

திருநீர் அணிவது எதற்காக என்பது தெரியுமா ?


குளியலைப் போலவே திருநீர் அணிவதும் அன்றாட வாழ்கையின் ஓர் முக்கிய பாகமாய் இருந்தது முற்காலத்தில்.


 தயாரிக்கும் முறை :
புல் மட்டும் அருந்தும் பசுவின் சுத்தமான எருவை, சிவராத்திரி அன்று உமியில் எரிப்பர். அதில் கிடைக்கும் சாம்பலை, தண்ணீரில் கலக்கி மறுபடியும் உலர வைத்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்த பின் நெற்றியில் இடுவதற்காக பாதுகாத்து வைக்கவேண்டும். இதுவே  சுத்தமான திருநீர் தயாரிக்கும் முறை.

அணியும் முறை :
திருநீரை நனைத்தும் நனைக்காமலும் அணிவதுண்டு. திருநீர் அணிந்தால் உடலின் துர் நீரை உறிஞ்சி எடுப்பதற்கும், உடல் வெப்பத்தைக் குறைப்பதற்கும், உடல்நிலையை மேன்மையடையச் செய்வதற்கும் வாய்ப்புண்டு என்பது நிருபிக்கப்பட்டுள்ளது.

திருநீரை நனைத்து அணிவதன் மூலம் உடல் வெப்பம் குறைவதனால் ஜுரம் பாதித்தவர்களின் நெற்றியில் நனைந்த திருநீர் பூசினால் ஜுரம் இறங்குவதை காணலாம்.

திரு விபூதி :
மூலிகைச் செடிகளை சுத்தமான நெய்யில் ஹோமகுண்டத்தில் வேக வைத்த பின் எஞ்சி இருப்பதை திருவிபூதி என அழைப்பதுண்டு.


உடல் முழுதும் திருநீர் பூச வேண்டுமா ?
திருநீர் பூசுவதையே மூட நம்பிக்கையாகக் கருதும் இக்காலத்தில், உடல் முழுதும் திருநீர் பூச வேண்டும் என்று சொன்னால், இறைவனருள் இதனால் கிடைக்கப் பெறும் என்ற நம்பிக்கை இருந்தாலும் உடலெங்கும் விபூதி அணிவதால் மற்றுமொரு நன்மை உண்டாகும்.

தலை உச்சியில் திருநீர் பூசினால் அங்குள்ள நீர்க்கெட்டை இழுத்தெடுக்கும் என்பது பலரும் கண்டறிந்துள்ளனர்.

பின் கழுத்தில் திருநீர் பூசுவது மிக  அவசியம் ஏனென்றால் நீரை உறிஞ்சி எடுக்கும் வாய்ப்பு மிக அதிகம் உள்ள இடம் அது.

காதுகளும் மிக முக்கியமான இடம். உடம்பின் 72,000 நரம்புகளும் ஒன்று சேரும் வர்மமாகும் காதுகள் ஒவ்வொரு நரம்புகளிலும் நீரும் கொழுப்பும் கட்டுவதற்கு வாய்ப்பு அதிகமுண்டு. இதனால் வாதம் பாதிப்புண்டாகலாம் என்று ஆயுர்வேதம் கூறுகின்றது.

உடலில் எந்த இடத்தில விபூதி அணிந்தாலும் அந்த இடத்தில் உள்ள ஈரத்தை உறிஞ்சி எடுக்கும். அவ்வாறு திருநீர் அணிந்தால் நவீன உலகமும் அங்கீகரித்த உடல் மருத்துவத்தை நாம் அடைகின்றோம் என்பதில் சந்தேகம் இல்லை.

Saturday, 29 March 2014

சரும பலவிருத்தி என்பது யாது ?


பட்டு போன்ற நம் சருமம் வெயில், தூசி, மழை போன்ற பல காரணிகளால் பாழாகிறது. குறிப்பாக நம் முகத்தை பேணி பாதுகாப்பது மிகவும் கடினமான செயல் ஆகும். நம் முகம் எப்போதும் பொலிவுடன் விளங்க ஒரு சரும பலவிருத்தி அல்லது ஸ்கின் டானிக் (Skin Tonic) இருப்பது தெரியுமா ?? ஸ்கின் டானிக்கா ?? இதன் மூலப்பொருள் என்ன ? இது எங்கே கிடைக்கும் ? எப்படி பாவிப்பது ? நம் வீட்டிலேயே தயாரிக்கலாமா ? இந்த கேள்விகளுக்கு விடை இதோ!

ரோஜா இதழ்களைக் கொண்டு தயாரித்த சாறு தான் நாம் குறிப்பிடும் 'சரும பலவிருத்தி' ஆகும். ரோஸ் வாட்டர் அல்லது பன்னீர் என்று கேட்டால் எல்லாக் கடைகளிலும் கிடைக்கும். நறுமணம் வீசும் இந்த பன்னீர், நம் நாட்டு சமையலில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. பண்டைய ரோமர்கள் இதை ஒரு கிருமி நாசினியாக பயன்படுத்தினர். பாபிலோனியர்களும் தங்கள் மத வழிப்பாட்டு நெறிகளில் பன்னீரை உபயோகித்தனர். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, உலக அழகி க்ளியோபாட்ரா ரோஜா எண்ணையை உடல் முழுக்க தேய்த்து, ரோஜா இதழ்களும் பாலும் கலந்த தொட்டியில் குளித்து தன் அழகை பராமரித்தாள் என்பது உலகறிந்த விஷயம் தானே !


பன்னீர் எல்லா கடைகளிலும் கிடைத்தாலும், இதை நம் வீட்டிலேயே தயாரிப்பதும் சுலபம். வீட்டில் ரோஜா செடிகளை வளர்ப்போர் இதை செய்யலாமே! அதிகாலையில் ரோஜா இதழ்களை பறித்து, குளிர்ந்த நீரில் நன்கு அலசி, ஒரு பெரிய பாத்திரத்தில் வடி கட்டிய நீரில் இட்டு கொதிக்க விட வேண்டும். நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், மூடி போட்டு தீயை நிறுத்தவும். நீரில் ரோஜா இதழ்களின் சாறு இறங்கும் வரை மூடியே வைத்திருந்து விட்டு, சில மணி நேரம் கழித்து அதை வடிகட்டி பயன்படுத்த வேண்டும்.


சரும பாதுகாப்பு :
பன்னீர் கலந்த நீரால் முகத்தை அடிக்கடி கழுவினால், முகம் பளப்பளப்பாக மாறும். அது மட்டும் அல்லாமல், எண்ணெய் பிசுக்கை போக்கும். வேனிர் கட்டிகள், சிறு புண்களை ஆற வைக்கும். சிரங்குகள், முகப்பருக்கள் வராமல் தடுக்கும்.

கூந்தல் பராமரிப்பு :
நீரில் பன்னீரை சேர்த்து கூந்தலை அலசுவதால், பொடுகு வராமல் தடுக்கிறது. ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் கூந்தல் வேர்களை பலமாக்கி, முடி வளர்வதை ஊக்குவிக்கிறது.

கண்களுக்கு உதவி :
தூக்கமின்மை, வெகு நேரம் கண் முழித்து வேலை பார்ப்பது, மணிக்கணக்காக கணிப்பொறியில் வேலை செய்வது ஆகியவற்றால் கண்ணுக்கு கீழே கரு வளையம் தோன்றும்.  இரவில் படுக்கும் முன் கண்களைச் சுற்றி பன்னீரை தடவிக் கொண்டு படுத்தால் நாளடைவில் கரு வளையம் நீங்கி கண்கள் பிரகாசிக்கும்.


பற்களை சுத்தப்படுத்த :
பன்னீர் ஒரு சிறந்த கிருமி நாசினி என்பதால், பற்கள் சம்பந்தப் பட்ட அனைத்து குறைகளையும் தீர்க்கிறது. பன்னீரை கொண்டு தினமும் இரண்டு வேலை வாயை கொப்பளித்து ( Mouth Wash ) வருவதால், வாய் துர்நாற்றம், ஈறு வலி, ரத்தக் கசிவு, பற்காரை இவற்றை நீக்குகிறது.

மன அழுத்தம் போக்க :
ரோஜா பூவின் நறுமணம் மன அழுத்தத்தை போக்கும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். இதனாலேயே, ரோஜா எண்ணையை பல அழகு நிலையங்களில் மசாஜ் செய்யப் பயன்படுத்துகிறார்கள். ரோஜா பூ நறுமணம் மிக்க ஊதுபத்திகளை தியான அறைகளில் உபயோகிப்பதால், ரத்த அழுத்தமும், மன அழுத்தமும் குறைகிறது.


 எங்கே புறப்பட்டு போறீங்க ? பன்னீர் வாங்கத் தானே ?
  

Friday, 28 March 2014

பந்திக்கு முந்து, படைக்குப் பிந்து


கலைஞானி கமல்ஹாசன் அவர்கள், ஒரு திரைப்படத்தில் 'பழமொழி சொன்னா அனுபவிக்கணும், ஆராய கூடாது' என்று வசனம் பேசுவார். ஆனால் நாம், இந்த பகுதியில், சில பழமொழிகளை சொல்லிப் பார்த்து அனுபவிக்கவும் போகிறோம், ஆராயவும் போகிறோம்... ஆரம்பிக்கலாமா ?

பழமொழிகள் என்பவை பழைய தலைமுறையினர் நம் நல்வாழ்வுக்கு விட்டுச் சென்ற அனுபவக் கூற்றாகும். பழங்காலத்தில் மக்களுக்கு ஏற்பட்ட அனுபவ முதிர்ச்சியினால் தோன்றிய இந்த பழமொழிகள், ஒரு சமுதாயத்தில் நீண்ட காலமாக புழக்கத்தில் இருந்து, பிறகு காலம் மாற மாற, அதன் அர்த்தங்களும் திரிந்து மருவி, வேறு அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளப் படுகிறது. அவ்வாறு உருமாறி இருக்கும் ஒரு பழமொழியை இங்கே அலசலாம்.

" பந்திக்கு முந்து, படைக்குப் பிந்து"


இன்றையப் பொருள் :
"பந்திக்கு முந்து" என்றால் சாப்பாட்டிற்கு முந்திச் சென்று சாப்பிட்டுவிட வேண்டும். கடைசியில் சென்றால் சில வகைப் பதார்த்தங்கள் கிடைக்காது என்பதனால், பந்திக்கு முந்தவேண்டும் எனது கொள்கின்றனர். 

"படைக்குப் பிந்து" என்றால் சண்டை சச்சரவுகள் ஏற்படும் பொழுது மற்றவர்களை முன் நிறுத்திவிட்டு, நாம் பிந்திச் சென்று விடவேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா ? ஆனால் இதுவே உண்மையல்ல. 

உண்மைப் பொருள் :
உண்மையில் அக்காலத்தில் காலாட்படையின் ஒரு பிரிவுக்கு " பந்திப்படை " என்று பெயர். போர் நடக்கும் காலத்தில் பந்திப்படையை முன்னே செல்ல விட்டுவிட்டு, பயங்கர ஆயுதங்களைக் கொண்ட படைகளை பந்திப்படைக்கு பிந்தி செல்ல வைத்து போரை முறையாக நடத்த வேண்டும் என்பதைக் குறிக்கும் பழமொழி. 

ஆக நாம் எதிராளியிடம் சண்டையிடும்போதும்கூட அதில் ஒரு ஒழுங்கு முறை 
இருக்க வேண்டும் என்பதை விளக்கும் மிக அருமையான பழமொழி ஆகும். இப்பழமொழிக்கு வேறு ஒரு விளக்கமும் வழக்கத்தில் உள்ளது.


பந்தியில் சாப்பிடுவதற்கு நம் வலது கை முந்தும். படைக்கு செல்லும் சமயத்தில் நம் வலது கை நாணைப் பின்னோக்கி இழுத்து அம்பை எய்யும். எவ்வளவு தூரம் பின்னோக்கி வலக்கை செல்கிறதோ அந்த அளவிற்கு அம்பு வேகமாகச் சென்று எதிரியை தாக்கும் என்பதால் , வலது கை  பந்திக்கு முந்தும். படைக்குப் பிந்தும் என்று சொல்கின்றார்கள். இதுவே நாளடைவில் உருமாறி "பந்திக்கு முந்து, படைக்கு பிந்து" என்று உருவாகிவிட்டது என்றும் சிலர் கூறுகின்றனர்.

Thursday, 27 March 2014

'த்ரீ-இன்-ஒன்' கோழி வறுவல் சமைப்பது இவ்வளவு எளிதா ?


அசைவ உணவுகளில் நாம் அனைவரும் அதிகம் விரும்புவது கோழிக்கறி சமையல். அதிலும் வேலை நிமித்தம் வீட்டைவிட்டு வெளியே வாழும் ஆண்களுக்கு, தாங்களே அசைவம் சமைக்க வேண்டும் என்றால், உடனே கை கொடுப்பது சிக்கன் மட்டுமே. சுத்தம் செய்வது சுலபம். சமைப்பது எளிது. ருசியோ அலாதி. இதை போல வெளிநாடுகளில் சமைத்து உண்ணும் ஆண்களுக்காகவே, இன்று ஒரு சுவையான த்ரீ-இன்-ஒன் சிக்கன் சைடு டிஷ் கற்று தருகிறேன். நீங்க ரெடியா ?   

செய்முறை விளக்கம் :
1) கோழித் துண்டுகளை நன்கு கழுவி ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் தேவையான அளவு மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு அனைத்தையும் சேர்க்கவும். கூடவே சிறிது இஞ்சி பூண்டு பசையை சேர்த்துக் கொள்ளவும்.( படம்-அ ) 

படம் அ

2) இதனுடன் நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு பிசிறி வைக்கவும். ( படம்–ஆ ) 

படம் ஆ

3) அடுப்பில் அடி கனமான வாணலியில், எண்ணெயைச் சுடவைத்து கோழிக் கலவையை சேர்த்து கிளரவும். ( படம்-இ ) 

படம் இ
4) 5 நிமிடம் எண்ணையிலேயே நன்கு வதக்கவும். பிறகு அரை கப் தண்ணீர் தெளித்து, மூடி போட்டு வேக விடவும். ( படம்-ஈ ) 

படம் ஈ
5)  நன்கு வெந்ததும், மீதி இருக்கும் நீரை குறைந்த தணலில் வைத்து சிறிது நேரம் வேக விட்டு ( படம்-உ ) வில் உள்ள பதம் வந்ததும், கொத்துமல்லி தூவி இறக்கவும். இது சப்பாத்தி, தோசை, பரோட்டாவுடன் சாப்பிட்டால் ருசியாக இருக்கும். இது ஒரு வகை.

படம் உ
6) வகை இரண்டு - இதே கோழியை சாதத்துடன் சாப்பிட விருப்பப் பட்டால், மீதம் உள்ள மசாலா கலந்த நீரை காய விடவும். (படம்-ஊ) வில் உள்ள பதத்தில் சுருளக் கிளறி, சுடச்சுட சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால், ஆஹா ! 

படம் ஊ
7) வகை மூன்று – இதை மேலும் சிவக்க வறுக்க விரும்பினால், குறைந்த தணலில் வைத்து, மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி வறுக்க விடவும்.  சாம்பார் சாதம், ரசம் சதம், தயிர் சாதம், தேங்காய் சாதம் ஆகியவற்றுடன் சாப்பிட்டால் தூள் ! 

சிக்கன் வறுவல்

Wednesday, 26 March 2014

பிலிப்பைன்ஸ் என்ற பெயர் எதனால் வந்தது என்று தெரியுமா ?


போர்சுகீசியரான பெர்டினன்ட் மெகல்லன் ( Ferdinand Magellan ) என்பவர், போர்சிகீசிய கடற்படையில் சேர ஆசைப்பட்டு விண்ணப்பித்தார். ஆனால், அரசர் இமானுவேல் ( Immanuel ) அதை நிராகரித்து விட்டார். 


அந்தக் கோபத்தில் நாட்டை விட்டு வெளியேறி, ஸ்பெயினில் குடியேறினார் பெர்டினன்ட் மெகல்லன். ஸ்பெயின் அரசனின் உதவியோடு 1519 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் நாள், மெகல்லனும் அவனுடைய 270 சகாக்களும் ஸ்பெயினிலிருந்து ட்ரிடினினாட், கொன்செப்சியன், சான் அன்டோனியோ, விக்டோரியா, சன்டியாகோ ஆகிய 5 சிறிய படகுகளில் உலகினைச் சுற்றப் புறப்பட்டனர். கொலம்பஸ்ஸைப் போல புதிய நாடுகளை கண்டறிவதே இந்த கடற் பயணத்தின் நோக்கமாக இருந்தது. 

1521 ஆம் ஆண்டு மார்ச் மாதம்.  தற்போது பிலிப்பைன்ஸ் என்ற அழைக்கப்படும் தீவின் ஒரு பகுதியான 'மெகல்லன் ஜலசந்தி'யை ( Strait Of Magellan ) அடைந்தனர். பிலிப்பைன்ஸ் தீவில் காலடி வைத்த முதல் ஐரோப்பியன் மெகல்லன் தான். அந்த நாட்டை தனக்கு உதவிய ஸ்பெயின் நாட்டு மன்னரின் ஆளுகைக்கு கீழ் கொண்டு வர முற்பட்டான். அப்போது, அந்த தீவில் வசித்த மக்களுடன் ஏற்பட்ட கைகலப்பில், ஒரு மூங்கில் ஈட்டி குத்தியதால் தன் நாற்பத்தி ஓராவது அகவையில் மரணத்தைத் தழுவினான்.  பசிபிக் பெருங்கடலில் பிரயாணம் செய்த முதல் ஐரோப்பியர் என்ற பெருமையும் மெகல்லனைச் சேரும். 




அதற்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு, 1542 ஆம் ஆண்டு ஸ்பெயினில் இருந்து வந்த  ருய் லோபெஸ் டி வில்லலோபோஸ் ( Ruy López de Villalobos )  என்பவர், பலத் தீவுகளைக் கொண்டு ஒரு பெரிய தீவுக்கூட்டமாக விளங்கும் அந்தப் பகுதிக்கு,  தனது மன்னன் பில்லிப் II (King Philip II)வை கௌரவபடுத்தும் விதமாக,  பிலிப்பைன்ஸ் தீவுகள் என்றுப் பெயரிட்டார்.

Monday, 24 March 2014

மிருகங்களுக்கும் ரத்த வகைகள் உள்ளனவா ?



மனிதர்களுக்கு நான்கு ரத்த வகைகள் (A, B, AB, O) உள்ளன என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அறுவை சிகிச்சைகளின் போது மனிதர்களுக்கு ஏன் ஒரே வகை ரத்தம் ஏற்ற வேண்டும் என்று தெரியுமா ? மனித ரத்தத்தில் பிறபொருள் எதிரிகள் (Anti Bodies) உள்ளன. பிறிதொரு வகை ரத்தம் ஏற்றப்படும் போது, இந்த பிறபொருள் எதிரிகள் தூண்டப்பட்டு எதிர்வினை ஏற்படுகிறது. இது சில சமயம் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். ஆகையால், ரத்த வங்கிகளில் ரத்ததானம் செய்யும் போது ரத்த வகைகளின் படி தனித்தனியாக சேமித்து வைக்கின்றனர்.  


நாய்களுக்கு 13 ரத்த வகைகள் இருந்தாலும், 8 வகைகளே அடிப்படை ஆகும். அவை DEA ( DOG ERYTHROCYTE ANTIGENS ) என்று பெயரிடப்பட்டு DEA 1 முதல் DEA 8 வரை எண்களால் பிரிக்கப் பட்டுள்ளது. நாய்கள் ரத்தத்தில் பிறபொருள் எதிரிகள் இல்லாததால், அனைத்து ரத்த வகைகளும் ஒத்துப் போகின்றன. சில கால்நடை மருத்துவ மனைகளில், ரத்த தானம் செய்வதற்காகவே சில நாய்களை தனியாக வளர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் பூனைகள் மனிதர்களைப் போல. A, B மற்றும் AB என்று 3 அடிப்படை ரத்த வகைகளைக் கொண்ட பூனைகள், அதே வகை ரத்ததை மட்டுமே ஏற்கிறது.

குதிரைகளிடம் 7 அடிப்படை ரத்த வகைகளைக் காணலாம். அவை A, C, D, K, P, Q, U ஆகும். இதை தவிர எட்டாவதாக  T வகை ரத்தத்தை கண்டு பிடித்து உள்ளனர். இந்த வகை ரத்தம் ஆராய்சிகளுக்கு மட்டுமே உதவுகிறது.


சரி நண்பர்களே, பசு மாடுகளுக்கு எத்தனை ரத்தப் பிரிவுகள் என்பது உங்களுக்கு தெரியுமா ?? 8 அடிப்படை ரத்தப் பிரிவுகள் இருந்தாலும், 800 க்கும் மேற்பட்ட ரத்த வகைகளை பசுக்களிடம் கணித்து உள்ளனர். உலகிலேயே மிகவும் சிக்கலான ரத்தவகை அமைப்பைக் கொண்டவை பசுக்கள் தான் என்பது மருத்துவர்கள் கருத்து.

இப்படிச் செய்வதால் நம் உடல் எடை குறையுமா என்ன ?


நாம் அனைவரும் செய்ய விரும்பும் இந்தச் செயலானது, ஒரு விதமான உடற்பயிற்சி என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். ஒரு நிமிடம் இந்த செயலை செய்வதால், நம் உடலில் இருபத்தி ஆறு காலோரிகள் எரிந்து ஆற்றல் வெளிப்படுகிறதாம். அதாவது , ஒரு மணி நேரம் இதை செய்வது, உடற்பயிற்சி கூடத்தில் ஒரு மணி நேரம் கடுமையாக பயிற்சி செய்வதற்கு இணையாகும் என்று மருத்துவர்கள் கணித்து இருக்கிறார்கள். அது சரி, நோகாமல் நோன்பு கும்பிடுகிற இந்த வேலை என்னவாக இருக்கும் என்று தெரியுமா ?

கலைஞானி கமல்ஹாசன் இந்த செயலை தன்னுடைய பல படங்களில் அரங்கேற்றி உள்ளார். 

“கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காய வில்லையே”.

ஆமாம் நண்பர்களே, முத்தம் கொடுத்தலை பற்றி தான் இங்கே தெரிந்து கொள்ளப் போகிறோம். ஒரு நிமிடம் முத்தம் கொடுத்தால் இருபத்தி ஆறு காலோரிகள் எரிந்து ஆற்றல் வெளிப்படுவது உண்மையாகும். முத்தம் என்றாலே நம் நாட்டில் ஆண் பெண் காதல் செய்யவதற்கு மட்டுமே என்று  நினைக்கிறோம். அனால் முத்தம் என்பது, நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒரு கருவி ஆகும். தாய் மனதோடு முத்தமிடுவது, குழந்தைகள் முத்தமிடுவது, பக்தன் தெய்வத்தை முத்தமிடுவது, அமைதிக்கான முத்தம், பாசத்தில் கொடுக்கப்படும் முத்தம்,  நட்புக்கான முத்தம், மரியாதை நிமித்தம் கொடுக்கும் முத்தம் என்று முத்தம் பல பரிணாமங்களில் உள்ளது. 

தாய் மண்ணே வணக்கம் !
சாதாரணமாக உதட்டைக் குவித்து கொடுக்கப்படும் முத்தம், இரண்டு தசைகளுக்கு வேலை தருகிறது என்றால், ‘பிரெஞ்சு கிஸ்’ எனப்படும் முத்தம் முப்பத்தி நான்கு தசைகளுக்கு வேலை கொடுக்கிறது. 

இதெல்லாம் இருக்கட்டும், முத்தம் கொடுப்பதால் என்ன நன்மை என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆரம்பத்தில் சொன்னதைப் போல உடற்பயிற்சியாக மட்டும் அல்லாது, முத்தம் பரிமாறுவதால் மன அழுத்தம் குறைகிறது.  கெட்ட கொழுப்பு என்னும் ‘கொலேஸ்ட்ரால்’ கட்டுப்படுகிறது. முத்தம் பரிமாறும்போது எச்சில் வேகமாகப் பாய்வதால், பற்களில் ‘ப்ளேக்’ (PLAGUE) எனப்படும் பற்காரைகள் ஏற்படாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மருத்துவ ஆதாயம் இருந்தாலும்,  நம் துணையை முத்தமிடும் போது,  நூறு லட்சம் பாக்டீரியாக்கள் பரிமாற்றம் நடக்கின்றது. இதனால், சில வியாதிகள் தொத்தும் அபாயமும் உள்ளது. முக்கியமாக இரத்தக் கசிவு கொண்ட ஈறுகள் இருந்தால்,  உயிர்கொல்லியான எய்ட்ஸ் நோய் (AIDS) கூட பரவும் வாய்ப்புள்ளது என்பதை மறந்து விடாதீர்கள். 

கன்னத்தில் முத்தமிட்டால் ...... 
ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி, சர்வதேச முத்த தினம் கொண்டாடப்படுகிறது என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ?

Sunday, 23 March 2014

பலா கொட்டை கத்திரிக்காய் மசாலா

இப்போ பலாப்பழ சீசன். பலாப்பழத்தை சாப்பிட்டு விட்டு கொட்டையை தூர எறியாதீர்கள்.  பலா கொட்டையில் புரதம் நிறைந்துள்ளது. அதை வீணாக்காமல் இவ்வாறு கத்தரிக்காயுடன் சேர்த்து வித்தியாசமாக சமைத்து பாருங்கள்... சாம்பார், ரசம், தயிர் சாதத்துடன் மனதை அள்ளும். சுவையோ சுவை !


செய்முறை விளக்கம் :
1) பலாக்கொட்டையை படத்தில் இருப்பதைப் போல் நசுக்கி தோல் உரித்து வைத்துக் கொள்ள வேண்டும். 


2) ஒரு இன்ச் இஞ்சித் துண்டு, 3 பல் பூண்டு, 3 கிராம்பு, சிறிது பட்டை – இவை நான்கையும் பசை போல அரைத்துக் கொள்ளவும் 


3) அடுப்பில் எண்ணெய் காய வைத்து, கடுகு உளுத்தம் பருப்பு தாளித்து, சன்னமாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கி, அரைத்து வைத்துள்ள பசையை சேர்த்து கிளரவும்.


4) அடுத்து, நசுக்கிய பலாக்கொட்டை, நீளமாக நறுக்கிய கத்திரிக்காய், சேர்த்து கிளரவும். 

5) தேவையான அளவு மஞ்சள் தூள் , மல்லி தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி, அரை தம்ளர் நீர் விட்டு, குறைந்த தீயில் மூடி போட்டு வேக விடவும்.

6) வெந்தவுடன், மீதம் உள்ள நீரை காய விட்டு ( தேவை என்றால் நறுக்கிய தக்காளி சேர்த்துக் கொள்ளலாம்) நன்கு சுருண்டு வரும்போது, மல்லி தழை தூவி அலங்கரிக்கவும்.


அடுத்து என்ன ? சாப்பிட வேண்டியது தானே ? சாப்பிட்டு விட்டு கருத்துக்களைச் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்   

சிவனின் வாகனம் நந்தியின் பெயர் காரணம் என்ன ?

சிவ பெருமானிடம் ஏதேனும் வேண்டுதல் இருந்தால் , அதை அவர் வாயிற் காப்போன் நந்தியின் காதில் ஓதி விட்டால், சிவன் காதிலேயே ஓதியது போல ஈடேறி விடும் என்ற ஐதீகம் உண்டு. இதை நாமும் காலம் காலமாக பின் பற்றி வருகிறோம். இந்த நந்தி பகவானுக்கு நந்தி என்ற பெயர் எவ்வாறு வந்தது ? இந்த பெயருக்கு பல காரணங்கள் இருப்பதாக சான்றோர்கள் கூறுகின்றனர். சிலவற்றை இங்கே காண்போமா ?

காரணம் 1 :
சிவ வணக்கம் தோன்றிய நாளிலிருந்தே, நந்தி என்பது சிவனது பெயராக இருந்து வருகிறது. அது 'ஆனந்தி' என்ற சொல்லின் சிதைவு ஆகும். 'ஆனந்தி' என்ற சொல் ஆனந்தத்தைச் செய்பவனாகிய சிவபெருமானைக் குறிக்கும். 'நந்தினி' என்ற சொல் அம்மையைக் குறிக்கும்.

காரணம் 2 :
'காளைமாடு' என்ற பொருளில் நந்தி என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். அக்கால மக்களின் வாணிபத்தில் பேருதவி புரிந்து வந்தது எருது ஆகும். எனவே அது வணக்கத்திற்குரிய விலங்காக மாறிவிட்டது.


தஞ்சை பெரிய கோவில் நந்தி
15 ஆம் நூற்றாண்டு 
காரணம் 3 :
நந்தி என்றால் நாகம் என்ற பொருளும் உண்டு. பாம்பை அணிந்தவன் சிவபெருமான் என்ற பொருளிலும் நந்தி என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

காரணம் 4 :
தமிழில் நந்தி என்ற சொல் 'நந்துதல்' என்ற வினைச் சொல்லில் இருந்து வருகிறது. இதில் விசித்திரம் என்னவென்றால் நந்துதல் என்ற சொல்லிற்கு மூன்று பொருள்கள் உள்ளன 

1. ஆக்கம் 
2. வளர்தல்,தழைத்தல்,விளங்குதல் என்ற பொருளும் உண்டு
3. அவிதல்,மறைதல், கெடுதல் என்றும் பொருள் உண்டு.

இவ்வாறு இறைவனாகிய சிவபெருமான் ஆக்கவும், காக்கவும், அழிக்கவும் செய்கிறான். சிவபெருமானின் மூன்று அடிப்படையான செயல்களையும் உள்ளடக்கிய சொல் நந்துதல் என்பது. ஆகவே நந்துதலைச் செய்பவன் நந்தி என்று காரணப் பெயராகவும் அது உருவாகிவிட்டது.

ஹளேபிடு கோவில் நந்தி, கர்நாடகா
12 ஆம் நூற்றாண்டு


இந்தப் பதிவின் காணொளியைக் காண : 


Saturday, 22 March 2014

கிளிமஞ்சாரோ என்றால் என்ன ?


‘கிளிமஞ்சாரோ மலைக் கனிமஞ்சாரோ யாரோ யாரோ ?’

யாருங்க இந்த கிளிமஞ்சாரோ ? கிளிமஞ்சாரோ என்பது, ஆப்ரிக்க நாட்டில் உள்ள தன்சானியாவில் அமைந்துள்ள பனி பொதிந்த ஒரு உயரமான மலைத் தொடர் ஆகும்.


இருபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வெடித்த கீபோ, மாவென்ஸி, மற்றும் ஷிரா என்ற மூன்று ஆக்ரோஷமான எரிமலைகளின் எச்சங்கள் தான், கிளிமஞ்சாரோ மலைத்தொடர். ஷிரா மற்றும் மாவென்ஸி மலைகள் இறந்த எரிமலைகளாக கருதப்படுகின்றன. ஆனால், கீபோ மலையோ உறங்கிக் கொண்டிருக்கும் எரிமலை ஆகும். எப்பொழுது வேண்டுமானாலும் வெடிக்கும் அபாயம் உள்ளது.


இந்த கீபோ மலைத்தொடரில் தான், ஆப்ரிக்காவின் உயரமான சிகரமான உஹுரு உள்ளது. பளபளக்கும் மலை என்று செல்லமாக அழைக்கப் படும் கிளிமஞ்சாரோ மலை, பல்லாயிரக்கணக்கான வனவிலங்குகளின் உறைவிடம் ஆகும். ஒரு எல்லைக்கு அப்பால், மலை ஏறுபவர்களை பேய் பிசாசுகள் கொன்று விடும் என்ற மூட நம்பிக்கை இன்றும் நிலவுவதால், காட்டு வாசிகளும் இந்த மலை ஏற தயங்குகின்றனர், என்பதே மிகவும் ஆச்சர்யமான விஷயம் ! 

ஆனாலும், மனிதர்களின் விடாமுயற்சியும், கடின உழைப்பும் கண்டிப்பாக பலன் தரும் அல்லவா ? ஹான்ஸ் மேயர் என்ற ஜெர்மானியரும், ப்ருஷ்ஷேல்லர் என்ற ஆஸ்திரியரும், பல தடைகளைத் தாண்டி, 1889 ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி கீபோ மலை உச்சியை அடைந்து சாதனை புரிந்தனர்.  தற்போது இங்கு மலை ஏறும் துணிகரமான பயிற்சி அளிக்கப் பட்டாலும், மலை ஏறும் போது நேரும் விபத்துகளும், உயிர் பலிகளும் அதிகம் ஆகும். இதற்கு காரணம், கிளிமஞ்சாரோவின் செங்குத்தான மலைப்பாங்கும், வழுக்கும் ஐஸ் பாறைகளும் ஆகும்.  



அதெல்லாம் இருக்கட்டும். கிளிமஞ்சாரோ என்ற பெயரின் காரணம் என்னவென்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆப்ரிக்காவில் வாழும் 'பண்ட்டு' இனத்தவரின் மொழி 'ஸ்வாஹிலி' ஆகும். இந்த மொழியில் ‘கிளிம’ என்றால் மலை என்றும் ‘ஞ்சரோ’ என்றால் உயர்ந்த என்றும் பொருள் படும். அதாவது, கிளிமஞ்சாரோ என்றால், உயர்ந்த மலை என்று பெயர் சூட்டியுள்ளனர். சரிதானே ??  


இந்தப் பதிவின் காணொளியைக் காண : 



தாய் தந்தை என்ற சொற்களுக்கு விளக்கம் தரும் ஒரே மொழி எது ?


உலகில் பத்தாயிரத்திற்கும் மேலான எண்ணிக்கையில் மொழிகள் இருக்கிறது என்று மேதைகள் கணித்து இருக்கிறார்கள். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் மட்டுமே, எழுத்துருவுடன் கணிசமாக புழங்கப்பட்டு வருகிறது. பல மொழிகள் வெறும் பேச்சு வழக்கிலும், மேலும் சில மொழிகள், இறந்து போன மொழிகள் ( Extinct Languages ) என்று குறிப்பிடப்படுகின்றது.

இன்றளவும் உயிரோட்டமுள்ள மொழியாக கருதப்படும் நம் தமிழ் மொழியில் தான், கி.மு. முதலாம் நூற்றாண்டில் உலகின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம்இயற்றப்பெற்றது. திராவிட மொழியான தமிழ்மொழி, இந்திய மொழிகளிலேயே மிக தொன்மையானது என்று 2004 ஆம் ஆண்டில் இந்திய அரசால் கௌரவிக்கப் பட்டது.



இதெல்லாம் நமக்கு தெரிந்த விஷயம் தான் என்றாலும், தமிழ் மொழியின் தனித் தன்மைக்குச் சான்றாக விளங்குவது, அதன் பல்வேறு வட்டார மொழிகளும் அவை வழங்கும் அழகியலும் ஆகும்.

தமிழ் மொழி என்பது பொதுவாக இருந்தாலும், நம் தமிழ் நாட்டிலேயே வேறு வேறு பகுதிகளில் உச்சரிக்கப்படும் தமிழை தனித்தனியாக பாகுபடுத்தி இருக்கிறார்கள். சென்னைத தமிழ் அல்லது மதராஸ் பாஷை, கொங்கு தமிழ், தஞ்சைத் தமிழ், நெல்லைத் தமிழ்குமரித் தமிழ், திருச்சித் தமிழ், யாழ்ப்பாணத் தமிழ், திருகோணமலைத் தமிழ், மட்டகளப்புத் தமிழ், மலேசிய தமிழ் , ஐயர் தமிழ், ஐயங்கார் தமிழ், பெங்களூரு தமிழ் என்ற பலவிதமான தமிழ் இருக்கிறது.

எடுத்துக்காட்டாக :
இங்கண் இ + கண் = இவ்விடம் ( இது சங்கத் தமிழ் )

இது எவ்வாறு மருவி விட்டது என்பதை பட்டியல் இட்டுள்ளோம் :
இங்கு கொங்கு தமிழ்
இங்க தஞ்சை தமிழ்
இங்கை இலங்கைத் தமிழ்
இங்கன நெல்லைத் தமிழ்
இங்குட்டு மதுரைத் தமிழ்

சரி, அதெல்லாம் இருக்கட்டும். தாய் தந்தை - இவற்றின் பெயர் காரணம் என்ன ? தாய் தந்தை என்ற சொற்களுக்கு, ஒரு அற்புதமான பெருந்தன்மையான விளக்கம் கொடுப்பது, உலகிலேயே நம் தமிழ் மொழி மட்டும் தான்.

தாய் = குழந்தையை தாவி எடுத்து தழுவுபவள்
தந்தை = குழந்தையை தந்தவன் = தந்த + தலைவன் (ஐயன்) = தந்த + ஐ

என்னே நம் தமிழ் மொழியின் வளமை! செழுமை!! தொன்மை!!! பெருமை!!!!


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மைய நோக்கப் பாடல் 




இந்தப் பதிவின் காணொளியைக் காண :



 
Copyright © 2014 அரிதும் அறிவோம்
Powered byBlogger